ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்,தேர்தல் நடத்தை விதிப்படி, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை, வாகன சோதனையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன்படி நேற்று முன்தினம் வரை, 15 பேரிடம், 16 லட்சத்து, 97 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கருங்கல்பாளையம் செக்போஸ்ட் வழியாக, காரில் வந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சீராம்பாளையம் தறிப்பட்டறை உரிமையாளர் சதீஷ்குமாரிடம், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே, மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் நவநீதன் காரில் எடுத்துச்சென்ற, இரண்டு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
நேற்று காலை, பி.பி.அக்ரஹாரம், கதவணை மின் நிலைய பிரிவு அருகே, ஈரோட்டை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ரித்திக், 64 ஆயிரத்து, 500 ரூபாயை பைக்கில் கொண்டு சென்றார். ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் உத்தரவுப்படி, 5.64 லட்சம் ரூபாய் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.