திருச்சி:திருச்சியில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், வட மாநில வாலிபரை கொலை செய்த இருவரை, போலீசார் தேடுகின்றனர்.
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை அருகேயுள்ள ஹோட்டலில், வட மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம், 34, என்பவர் வேலை செய்தார். வீடு ஏதும் இல்லாததால், பிளாட்பாரத்தில் தங்கியிருந்தார். அப்போது, பழக்கமான பாலா, கணேசன் ஆகியோருடன் சேர்ந்து, நேற்று முன் தினம் மதியம், மது குடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், மூவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், பாலாவும், கணேசனும் சேர்ந்து, விக்ரமை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர். படுகாயம் அடைந்த விக்ரம், அதே இடத்தில் இறந்தார். மலைக்கோட்டை போலீசார், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
பெண் தற்கொலை
திருச்சி மாவட்டம், துறையூர் அடிவாரத்தில் உள்ள வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசி, 57. இவரது கணவர் கஸ்துாரி, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். குழந்தை இல்லாததால், தமிழரசி தன் தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
மதுவுக்கு அடிமையான தமிழரசி, தாய் உட்பட உறவினர்களுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் விரக்தி அடைந்த தமிழரசி, அரளி விதையை அரைத்துக் குடித்தார். துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.