கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வடசென்னையில் பகுதியில் இரண்டு மண்டலங்களை தவிர, சென்னை மாநகராட்சியின் மற்ற 13 மண்டலங்களிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், மழை நீர் கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பு, நீர்நிலைகள் அபகரிப்பு, சாலை, வடிகால் கட்டமைப்பில் தொலைநோக்கு பார்வையின்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காமை உள்ளிட்ட காரணங்களால், சென்னையில் நிலத்தடிநீர் போதிய அளவு தங்குவதில்லை.
210 நீர்நிலைகள்
விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சியில், ஏரி, குளங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. 2011ம் ஆண்டு விரிவாக்கத்திற்கு பின், சென்னையை சுற்றி உள்ள பல ஏரி, குளங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்தன.
இரண்டு ஆண்டுகளுக்குமுன், 210 நீர்நிலைகளை கண்டறிந்து, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன. வடிகால் உள்பகுதி, சாலையோரம், பூங்கா என, 2,450 உறை கிணறுகள் அமைக்கப்பட்டன.
இதனால், சில ஆண்டுகளாக, நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. தற்போது, சாலை, கால்வாய், வடிகால் கட்டமைப்புகள் பல நுாறு கோடி ரூபாயில் சீரமைக்கப்படுகின்றன.
ஆனால், மழை நீர் பூமிக்குள் செல்லும் வகையிலான, கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
25 சதவீதம் குறைவு
சென்னை மாநகராட்சி, மணல், களிமண், பாறை போன்ற, அடுக்குகளை கொண்ட நிலப்பரப்பு. நிலத்தடி நீரை கணக்கிட, 200 வார்டிலும், 2021ம் ஆண்டு, நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டன.
இதனால், ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டம் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. கடந்தாண்டு, கோடை வெயிலால், மார்ச், ஏப்ரல் மே மாதங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.
ஜூன் மாதம் பெய்த எதிர்பாராத மழையால், ஜூன், ஜூலை மாதங்களில் 6 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.
ஆகஸ்ட் மாதம், ஆறு மண்டலங்களில், நிலத்தடி நீர்மட்டம் 3 அடி வரை குறைந்தது. எட்டு, ஒன்பது மண்டலங்களில், நான்கு அடி வரை அதிகரித்துள்ளது. மொத்த மண்டலங்களை கணக்கிடும்போது, 5 அடிவரை உயர்ந்தது.
இந்நிலையில், அக்., மாதம் துவங்கிய வடகிழக்கு பருவ மழை, டிச., 13ம் தேதி முழு நிறைவு பெற்றது. ஆண்டு சராசரி அளவில், 2021ஐ விட, 2022ல், 25 சதவீதம் மழை குறைந்துள்ளது.
சென்னையில், வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தும் பருவமழை, துவக்கத்தில் சில நாட்கள் பெய்துவிட்டு பின் குறைந்தது.
இந்திய கடற்பகுதியில் நிலவும், 'லா நினா' என்ற வெப்பம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றத்தால், தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை, வடகிழக்கு மாநிலம் மற்றும் கடலில் பெய்ததால், பருவ மழை குறைந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
காலநிலை மாற்றத்தால், பருவ மழை கிடைக்கவில்லை. குறிப்பிட்ட இடங்களில் அதிகமாகவும், பல பகுதிகளில் குறைவாகவும் மழை பெய்தது. பூமிக்குள் போதிய அளவு நீர் இறங்காததால், நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. சென்னையின் குடிநீர் தேவையை, ஏரி, கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் வழியாக நிவர்த்தி செய்வதுடன், கோடையையும் சமாளிக்க முடியும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, முறையான மழைநீர்
சேகரிப்பு கட்டமைப்பு வழியாக, நிலத்தடி நீர் பிரச்னையை ஓரளவு தீர்க்க முடியும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்
-- நமது நிருபர் --