வில்லிவாக்கம், வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் நகர், மூன்றாவது பிரதான சாலையில், பொதுமக்களின் சேவைக்காக 2014ல், காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது.
இந்த மையம், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பாழடைந்து, சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக இருக்கிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தெற்கு ஜெகநாதன் நகரில், பிரதான சாலைகள் உட்பட ஏராளமான தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில், இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை.
அதேபோல, இங்குள்ள காவல் உதவி மையமும் பயன்பாடின்றி பாழடைந்துள்ளது. மையத்தின் வெளிப்புறத்தில் அவசர தொலைபேசி எண்கள் கூட இல்லை.
பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால், போலீசார் ரோந்து இல்லாததால், இரவு நேரத்தில் பெண்கள், சாலையில் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர்.
வில்லிவாக்கம் காவல் எல்லையில், இதேபோல பல இடங்களில், உதவி மையங்கள் பயனின்றி பூட்டியே கிடக்கின்றன.
சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.