கோவை:விபத்து இழப்பீடு வழக்கில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை, 'ஜப்தி' செய்ய உத்தரவிடப்பட்டது; பாதித்தொகை செலுத்தியதால் நடவடிக்கை நேற்று தற்காலிகமாக கைவிடப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 39; லெதர் கம்பெனி தொழிலாளி. தன் இளைய சகோதரர் முரளி கிருஷ்ணன் என்பவருடன், சேலத்தில் இருந்து கோவை மாவட்டம், வால்பாறைக்கு, 'பைக்'கில் சென்றார்.
கடந்த, 2011, ஆக., 8ல் இருவரும் சோலையார் சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த வனத்துறை ஜீப் மோதியதில், சத்தியமூர்த்தி சம்பவ இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த முரளி கிருஷ்ணன் தீவிர சிகிச்சைக்கு பின் பிழைத்தார்.
விபத்து இழப்பீடு வழங்கக்கோரி, சத்தியமூர்த்தி மனைவி சுகந்தி, முரளி கிருஷ்ணன் ஆகியோர் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த கோர்ட், விபத்தில் இறந்த சத்தியமூர்த்தி குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய், காயமடைந்த முரளிகிருஷ்ணனுக்கு, 20 லட்சம் இழப்பீடு வழங்க, 2018ல் உத்தரவிட்டது.
உத்தரவுக்கு எதிராக வனத்துறையினர், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதனால், இருவருக்கும் இழப்பீடு தொகையில், 50 சதவீதத்தை கோர்ட்டில் செலுத்தினர்.
மேல்முறையீட்டு விசாரணையில், கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும், இழப்பீட்டு வழங்காமல் கோவை மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்தது.
இதனால், கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், 2020ல் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். வட்டியுடன் சேர்த்து, 34 லட்சம் ரூபாய் வழங்க கோரி மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
மனுவை விசாரித்த கோர்ட், கோவை கலெக்டர் ஆபீசிலுள்ள கார், ஜீப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, கோர்ட் அமினாக்கள் மருதையன், சண்முகம், வக்கீல் சதீஷ்குமார் ஆகியோர், கோவை கலெக்டர் ஆபிஸ் பொருட்களை ஜப்தி செய்ய நேற்று சென்றனர்.
அப்போது, இழப்பீடு தொகையில், 28 லட்சம் ரூபாய்க்கு, சேலம் கோர்ட்டில் மனுதாரர்கள் பெயரில் காசோலை வழங்கி விட்டதாகவும், மீதி தொகையை ஒரு சில நாட்களில் கோர்ட்டில் செலுத்துவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அதே போல, கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலக பொருட்கள், வாகனங்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள், பேச்சில் சமரசம் ஏற்பட்டதால் திரும்பி சென்றனர்.