திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக, உதவித்தொகை பெற, 1,783 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் (புதுமைப் பெண்) கீழ், 6 முதல், 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேர்ந்து, இடைநிற்றல் இல்லாமல் கல்வியை முடிக்கும் மாணவிகளுக்கு, மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின், இரண்டாம் கட்ட துவக்க விழா, நேற்று திருவள்ளூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட அளவில், ஜெய்வாபாய் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அதன் காணொலி ஒளிபரப்பப்பட்டது.
பின், நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் அலுவலர் அம்பிகா வரவேற்றார். கலெக்டர் வினீத், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியருக்கு புதுமை பெண் திட்டஏ.டி.எம்., அட்டை வழங்கி பேசுகையில், ''உதவித் தொகை பெறும் மாணவிகள், தாங்கள் உயர்கல்வி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
திட்டத்தை கண்காணிக்கவும், நல்ல முறையில் செயல்படுத்தவும் 'நோடல்' அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவியருக்கான உதவித் தொகை திட்டத்தையும் தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.
துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயனாளிகள்எவ்வளவு பேர்?
புதுமைப்பெண் திட்டத்தில், முதல் கட்டமாக, திருப்பூர் மாவட்டத்தில், 2022- 2023ல், 40 கல்லுாரிகளில் இருந்து, 3,257 மாணவியருக்கு தலா, 1,000 ரூபாய் வீதம், 3.90 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக, 49 கல்லுாரிகளில் இருந்து, 1,783 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, 2.13கோடி ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட உள்ளது.