திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், வட்டி மானியத்தை உயர்த்தி வழங்கவேண்டும்; ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்ட சலுகையை நீட்டிக்க வேண்டுமென, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அப்படியிருந்தும், பட்ஜெட்டில் அத்தகைய அறிவிப்பு ஏதுமில்லை.
கடந்த மே மாதத்தில் இருந்து, 'ரெப்போ ரேட்' விகிதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று, 0.25 சதவீதம் அதிகரித்து, 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி, 'ரெப்போ ரேட்' விகிதத்தை, 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 'ரெப்போ ரேட்' விகிதம், 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி, 0.25 சதவீதமும், 'பாங்க் ஆப் இங்கிலாந்து', 0.50 சதவீதம் அளவுக்கு, வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. பணவீக்கம் மற்றும் வாங்கும் சக்தி குறைந்த காரணங்களால், வெளிநாடுகளில் பொருளாதார மந்தம் நிலவுகிறது.
இதனால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் சர்வதேச அளவில் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. இத்தகைய சூழலில் வட்டி விகிதம் உயர்வதால், உற்பத்தி செலவு கடுமையாக உயருமென, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ''கடந்த ஒன்பது மாதங்களில், ஆறுமுறை, 'ரெப்போ ரேட்' உயர்ந்துள்ளது. வட்டி சுமை அதிகரித்துள்ளதால், வட்டி சமன்படுத்தும் திட்டத்தில், வட்டி மானியத்தை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு பண மதிப்பில் ஆர்டர் ஒப்பந்தம் செய்ய திட்டமிட வேண் டும். கொரோனா காலத்தில் வழங்கியது போல், ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை நீட்டித்து, வட்டி சுமையை குறைக்க, மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.