திருப்பூர் : திருப்பூரில், திருட்டு வாகனங்களை கண்டறிய மாதந்தோறும் ஒரே நேரத்தில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் - ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் அன்றாடம் வாகனம் தணிக்கை மேற்கொண்டு விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். சமீபத்தில், போலீஸ் கமிஷனராக பொறுபேற்ற பிரவீன்குமார் அபினபு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். கமிஷனர் உத்தரவின் பேரில், 'மாஸ்' வாகன தணிக்கையை மாதந்தோறும் ஒன்றிரண்டு முறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
முதல்கட்டமாக கடந்த, 25ம் தேதியும் மற்றும் 6ம் தேதியும் மாநகர பகுதியில் ஒரே கட்டமாக, 10க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய குழுவினர் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் தலைமையில், பிரதான ரோடுகளில், 16 இடங்களில் வாகன தணிக்கை செய்தனர்.
இதில் ஆயிரத்து, 500 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாத, 34 வாகனங்கள், மதுபோதையில் வந்த, ஒன்பது வாகனங்கள் மற்றும் பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 513 வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். போலி நம்பர் பிளேட், பெயர் மாற்றப்படாமல் இயங்கும் வாகனம், விதிமீறல் வாகனம் என, பல வகையில் போலீசார் சோதனை செய்தனர். சோதனை செய்யப்படும் வாகனத்தின் எண்களை உடனடியாக 'காவலன் செயலி'யில் பதிவிட்டு சோதனை செய்கின்றனர்.
இதனால், வாகனத்தின் அனைத்து விவரங்களும் போலீசாருக்கு தெரிய வருவதால், விதிமீறல் இருந்தால் அபராதம் விதிக்கின்றனர். இல்லையென்றால் அனுப்பி விடுகின்றனர். விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் போலீசாரிடம் சிக்கி கொள்கின்றனர். குறிப்பாக ஒன்றிரண்டு திருட்டு வாகனங்களும் போலீசாரிடம் சிக்கியது.
சிக்கியது திருட்டு டூவீலர்
திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறியதாவது:
போலி நம்பர் பிளேட், பெயர் மாற்றாமல் வாகனம் ஓட்டுவது போன்ற காரணத்தால், குற்றங்கள் நடக்கும் போது கண்டுபிடிக்க போலீசாருக்கு சில சிரமம் ஏற்படுகிறது. இதற்காக, மாநகரில் இரு முறை, 20 இடங்களில் போலீசார் ஒரே கட்டமாக வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தணிக்கையில், பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கப்பட கூடிய வாகன ஓட்டிகளுக்கு, பெயர் மாற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடந்த வாகன தணிக்கையில், திருட்டு டூவீலர் ஒன்று சிக்கியது.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதவிர மற்ற விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரும் மாதங்களில் மாதம், ஒன்று அல்லது இரு முறை 'மாஸ்' வாகன தணிக்கை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.