செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து, திருட்டு வழக்கில் தண்டனை பெற்ற இரண்டு சிறுவர்கள், தப்பிச் சென்றனர்.
செங்கல்பட்டு சமூக நலத்துறையின் கீழ், அரசு சிறப்பு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில், சிறார் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற சிறுவர்கள் அடைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஐயப்பன், 18, என்பவர், திருட்டு வழக்கில், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்.
இதேபோன்று, கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், திருட்டு வழக்கில், மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றவர். இவர்களை, மேற்கண்ட இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
அதன்பின், இல்லத்தில் இருந்து இரண்டு சிறுவர்களும், நேற்று தப்பிச் சென்றனர். இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.