மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், நேற்று காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.
தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் உதயா தலைமையேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, வெங்கட்ராகவன் முன்னிலை வகித்தனர். மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில், 22 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், திம்மாவரம் ஊராட்சி தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் அருள் தேவி பேசியதாவது:
ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதி மிகவும் மோசமாக உள்ளது. நுாறு நாள் வேலை திட்டத்தில் நியமிக்கப்படும் பணிதள பொறுப்பாளர்கள், தொடர்ந்து குறிப்பிட்ட நபர்களே உள்ளனர்.
ஊராட்சியில் உள்ள மற்ற நபர்களையும் நியமிக்க வேண்டும். தொடர்ந்து ஒருவரே இருப்பதால், தவறுகள் நடக்கின்றன.
ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் என, தனித்தனியாக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நிர்வாகத்தில் பெண் ஊராட்சி தலைவரின் உறவினர்கள் தலையீடு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் ஊராட்சிகளில், குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை. காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள 103 அரசு பள்ளிகளில், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்கு, பள்ளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஒரு சில பள்ளிகளில், வங்கி கணக்கு பிரச்னை காரணமாக, பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.