தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில், கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதை தடுக்க வேண்டிய சட்ட-ம் - ஒழுங்கு போலீசாரும், கண்டுபிடித்து தகவல் தெரிவிக்க வேண்டிய உளவுத்துறை போலீசாரும் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அவ்வப்போது, தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர். குறிப்பாக, கல்லுாரி மாணவர்கள், வட மாநில வாலிபர்களே, அதிகமாக கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில், தாம்பரத்தில் புது வழியில் சந்தேகம் ஏற்படாத வகையில், கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது.
பிச்சை எடுக்கும் முதியவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. கடை கடையாக ஜோடியாக வந்து பிச்சை எடுக்கும் முதியவர்களை நோக்கி, ஒருவர் வருகிறார். அவர் திடீரென பணத்தை எடுத்து நீட்டுகிறார். அந்த பணத்தை வாங்கி, கசக்கி பையில் வைத்துக் கொள்கின்றனர். பின், தாங்கள் மாட்டியிருக்கும் அழுக்கு பையில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து கொடுக்கின்றனர்.
அந்த பொட்டலத்தை வாங்கும் அந்த நபர், எதுவும் தெரியாதது போல் நடந்து செல்கிறார். தாம்பரம் போலீசார், பிச்சை எடுப்பவர்களின் விபரங்களை சேகரித்து, முறையாக கண்காணிக்காமல் துாங்குவதே, இதுபோன்று யுக்திகளை கஞ்சா கும்பல் பின்பற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
போலீஸ் கமிஷனர் நேரிடையாக களம் இறங்கினால் மட்டுமே, கஞ்சா கும்பல் பின்பற்றும் யுக்திகளை கண்டறிந்து, கட்டுப்படுத்த முடியும்.