செங்கல்பட்டு:சாலுார் கிராமத்தில், சாராயம், போதைப் பொருள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என, பெண்கள், மாவட்ட கலெக்டரிடம், நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
சாலுார் ஊராட்சி தலைவர் கற்பகம் மற்றும் பெண்கள் ஆகியோர், மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு விபரம் வருமாறு:
திருக்கழுக்குன்றம் அடுத்த சாலுார் ஊராட்சியில், சாலுார் காலனி பகுதி உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், சாராயம் மற்றும் போதைப் பொருட்களை விற்று வருகிறார். அதுமட்டுமின்றி, அப்பகுதியில் சூதாட்டம் களைகட்டி வருகிறது.
இதனால், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இப்பகுதி இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதன் மீது, நடவடிக்கை எடுக்க, கிராமசபை கூட்டத்திலும், மகளிர் சுய உதவிக்குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி, காவல் துறைக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இளைஞர்கள் சீரழிவதை தடுக்கவும், சமூக விரோத செயல் நடப்பதை தடுக்கவும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சாலுார் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:
சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதனால், குழந்தைகளின் கல்வி பாதிக்கிறது. சாலையில் பெண்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை நிரந்தரமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனை செய்வோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதன்பின், சாராயம் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.