குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம் படப்பை, மணிமங்கலம், நந்தம்பாக்கம், கொளப்பாக்கம் ஊராட்சிகளில், இரண்டு ஆண்டுகளாக தெரு நாய்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துவிட்டது.
அதேபோல், குன்றத்துார் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாய் தொல்லை பெருகிவிட்டது.
இப்பகுதிகளில் இருந்து, தினசரி ஐந்து பேராவது நாய் கடிக்கு ஆளாகி, அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
அந்த வகையில், குன்றத்துார் வட்டாரத்தில் மட்டும், ஐந்து மாதங்களில், 1,100 பேர், தெரு நாய் கடிக்கு ஆளாகி, குன்றத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
குன்றத்துார் நகராட்சி, அமைச்சர் அன்பரசனின் சொந்த ஊராகும். அமைச்சர் ஊரிலேயே, தெரு நாய்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்துார் நகராட்சி மக்கள் கூறியதாவது:
தெரு நாய்களின் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக திரியும் இவை, பைக்கில் செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கின்றன.
நாய்களால், முதியவர், சிறுவர்கள் வெளியே செல்லவும் அச்சப்படுகின்றனர். கையில் குச்சியுடன் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக, குன்றத்துார் நகராட்சியில், பல முறை புகார் அளித்தும், நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை.
மாதம் எண்ணிக்கை
செப்., 174அக்., 226
நவ., 201
டிச., 282
ஜன., 216மொத்தம் 1,099
குன்றத்துார், மாங்காடு என இரு நகராட்சிகளுக்கும் இதுவரை, சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை. குன்றத்துார் நகராட்சியை, மறைமலை நகர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கூடுதலாக கவனித்து வருகிறார். மாங்காடு நகராட்சியை, கூடுவாஞ்சேரி நகராட்சி சுகாதார ஆய்வாளர், கூடுதலாக கவனிக்கிறார்.இருவரும், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே, இந்த நகராட்சிகளுக்கு வருகின்றனர். பொதுமக்களின் நலனை கருதி, சுகாதார ஆய்வாளர்களை தனியாக நியமித்து, தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.