அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது.
இதில், காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் செல்வகுமார், 36. இவர், தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு, மனைவி ரேவதி, 32, மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
ரேவதி, அருகில் உள்ள ஒரு கடையில், கூலிக்கு பூக்கட்டி கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.
இதில் வரும் வருமானத்தை வைத்து, அவர்கள் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் ஓட்டு வீட்டில், இரண்டு மின் விளக்குகள், ஒரு பேன், ஒரு சிறிய 'டிவி' மட்டும் உள்ளது.
மின் பயன்பாடு அதிகம் தேவைப்படும் சாதனங்களான குளிர்சாதன பெட்டி, வாஷிங் மிஷின் மற்றும் 'ஏசி' போன்ற எந்தவித எலக்ட்ரிக்கல் சாதனமும் பயன்படுத்துவதில்லை.
பல ஆண்டு காலமாக, 1,000 ரூபாய்க்கு குறைவாகவே, இதுவரை மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு, நவம்பர் மாதம், 685 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
தற்போது, கடந்த 10 நாட்களுக்கு முன், இந்த வீட்டிற்கு மின் கணக்கீட்டாளர், மின்சார பயன்பாடு குறித்து கணக்கெடுத்துள்ளார்.
அதில், 970 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளீர்கள்; இதற்கு, 6 ஆயிரத்து 250 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன குடும்பத்தினர், அருகில் உள்ள அச்சிறுபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர்.
அதற்கு, மின் வாரியத் துறையினர், ''நீங்கள் மின்சாரம் பயன்படுத்தி உள்ளீர்கள்; அதற்காகத் தான், இவ்வளவு தொகை வந்துள்ளது. இந்த தொகையை கட்டவில்லை என்றால், மின் இணைப்பை துண்டித்து விடுவோம்,'' எனக் கூறியதுடன், கடந்த ஒரு வார காலமாக அலைக்கழித்து வந்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நேரில் சென்று ஆய்வு செய்து, மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து, அச்சிறுபாக்கம் இளநிலை செயற்பொறியாளர் பிரபு கூறியதாவது:
அவர்கள், தண்ணீர் சூடாக்கும் 'ஹீட்டர்' பயன்படுத்தி இருக்கலாம், மின் மீட்டரை நேரில் சென்று ஆய்வு செய்ததில், மீட்டர் பழுது இன்றி நன்றாக உள்ளது.
மேலும், தற்போது செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகையை, செலுத்தித் தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.