திருப்பரங்குன்றம் ஒன்றியம் வலையங்குளம், வலையபட்டி, எலியார்பத்தி, ஆலங்குளம், நெடுமதுரை, பாறைபத்தி, ஏற்குடி அச்சம்பத்து, பெரியகூடக் கோயில் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மல்லிகைப்பூ, கடலை, கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, வெங்காயம், வாழை பயிரிட்டுள்ளனர். சிலர் நெல் சாகுபடியும் செய்துள்ளனர். இப்பகுதிகளில் ஏராளமான காட்டுப்பன்றிகள் உள்ளன.
அவை இரவு நேரங்களில் கூட்டமாக வயல்களில் நுழைகின்றன. வேருடன் பயிர்களை பிடுங்கி உண்கின்றன. இதனால் இழப்பை சந்திக்கும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். அவர்கள் கூறுகையில், ''ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்கிறோம். பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு வரும்போது காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. அவற்றை விரட்டுவோரை தாக்க முயல்கின்றன. கண்மாயில் அடர்ந்துள்ள சீமைக் கருவேல் மரங்களே காட்டுப் பன்றிகளின் வசிப்பிடம். அவற்றை காட்டுக்குள் விரட்ட வனத்துறையின் நடவடிக்கை தேவை. பன்றிகளுக்கு பயந்து பலர் விவசாயத்தை விட்டு விட்டனர். இதுதொடர்ந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்'' என்றனர்.
திருப்பரங்குன்றம், பிப். 9--
திருப்பரங்குன்றம் உட்பட மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுப் பன்றிகள் பயிர்களை பாழ்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.