வேலுார்:கூட்டுறவு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 10.55 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி பெண் கிளை மேலாளர் மீது, வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி, குடியாத்தம் கிளையில் மேலாளராக பணியாற்றியவர் உமா மகேஸ்வரி, 38. இவர், 2018 - 19ல் போலி மகளிர் சுயஉதவி குழுக்களை துவங்கி, 97 லட்சம் ரூபாய் கடன் வழங்கி மோசடி செய்தார்.
இதனால், கடந்தாண்டு ஜூன், 1ல் வேலுார் வணிக குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து, வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர். பின் அவர், டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் இனாம்புலியூரைச் சேர்ந்த ராமமூர்த்தி, வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த, 2019ல் வேலுார் தோட்டப்பாளையம் கூட்டுறவு வங்கி கிளையில் மேலாளராக உமா மகேஸ்வரி பணியாற்றினார்.
பணம் கொடுத்தால், கூட்டுறவு துறையில் வேலை வாங்கிக் கொடுக்க முடியும் எனக் கூறினார். அதை நம்பி, இருவருக்கு வேலை வாங்கித் தரும்படி, 10.55 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.
மேலும், கூடுதலாக பணம் தேவைப்படும் என அவர் கூறியதால், என் இரண்டு ஏ.டி.எம்., கார்டுகளையும் அவரிடம் கொடுத்தேன்.
ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் அவர், வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, தற்போது ஜாமினில் வந்துள்ள உமா மகேஸ்வரியிடம் விசாரிக்க, வேலுார் போலீசார் சென்ற போது, அவர் தலைமறைவாகி விட்டார்.