துாத்துக்குடி:நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி, தாசில்தார் வீடு முன் தரையில் அமர்ந்து மனைவி போராட்டத்தில் ஈடுபட்டார்.
துாத்துக்குடி குடி மைப் பொருள் வழங்கல் தாசில்தார் ஞானராஜ், 49; மனைவி கிரேசி விஜயா, 43. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு, 2021ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கிரேசி விஜயா, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஞானராஜ் தன்னுடன் அழைத்துச் சென்றார். பின், குழந்தைகளை பராமரிக்க முடியாமல் உறவினர் வீட்டில் விட்டு உள்ளார்.
இதனால், அடிக்கடி கணவன், மனைவி மோதிக் கொண்டதால், ஞானராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.
குழந்தைகளை தன்னுடன் அனுப்பக்கோரி, கிரேசி விஜயா துாத்துக்குடி மூன்றாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் இருவரையும் தாயிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகளை தன்னுடன் அனுப்பக் கோரி, ஞானராஜ் வீடு முன், கிரேசி விஜயா தர்ணா செய்தார்.