திருப்பூர்:பி.பார்ம்., படித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர், திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், எஸ்.பெரியபாளையம் அருகே பதிவு செய்யாத டாக்டர் ஒருவர், கிளினிக் வைத்து நடத்தி வருவதாகவும், அனைவருக்கும் ஊசி, மருந்து கொடுத்து மருத்துவம் பார்ப்பதாகவும் கலெக்டர் வினீத்துக்கு புகார் வந்தது.
இது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட மருத்துவத்துறைக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி, மாவட்ட தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண்பாபு, நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் அந்த கிளினிக்கில் ஆய்வு நடத்தினர்.
அங்கு, மருந்து, மாத்திரை எழுதிக் கொடுத்ததுடன், நோயாளிகளுக்கு ஊசியும் செலுத்தி வந்த ராஜா, 49, என்பவரை அழைத்து வந்து, மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
பின், மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், ''பிபார்ம்., மட்டும் படித்து விட்டு, ராஜா கிளினிக் நடத்தி உள்ளார்.
''வெளிமாநிலங்களில் உயர் படிப்பு படித்ததாக சான்றிதழ்களை சமர்ப்பித்தார்.
''விசாரணையில், சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலி என தெரிய வந்துள்ளது. கிளினிக் 'சீல்' வைக்கப்பட்டது,'' என்றார்.
இணை இயக்குனர் புகாரை தொடர்ந்து, ஊத்துக்குளி போலீசார், ராஜாவை கைது செய்தனர்.