விழுப்புரம்-விழுப்புரத்தில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட திடீர் வாகன சோதனையில், விதிமீறிய 7 பேரது லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரை செய்தனர்.
விழுப்புரத்தில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் நேற்று இரவு போக்குவரத்து போலீசார் முக்கிய சந்திப்புகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர், போக்குவரத்து போலீசார் பெருமாள், வேல்முருகன் உள்ளிட்டோர் விழுப்புரம் நேருஜி சாலை, வீரவாழியம்மன் கோவில் சந்திப்பு, காந்தி சிலை சந்திப்பு, சிக்னல் சந்திப்பு ஆகிய இடங்களில் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இருசக்கர வாகன ஓட்டிகளின் லைசென்ஸ், வாகனங்களுக்கு ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சோதித்து தணிக்கையில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த தொடர் சோதனையில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தணிக்கை செய்தனர்.
இதில் விதி மீறி வந்த 50 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டது. அதில் 7 பேரின் லைசென்ஸ்களை ரத்து செய்ய பரிந்துரை செய்தும், மது அருந்தி வாகன ஓட்டியதாக 4 பேர் மீதும், மொபைல் போன் பேசியபடி வந்த 4 பேர், லைசன்ஸ் இல்லாமல் வந்த 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விதிமீறல் மீது ஸ்வைப் எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. விழுப்புரத்தில் அவ்வப்போது வரும் போக்குவரத்து விதிமீறலை தடுக்கும் வகையில், இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.