திருவண்ணாமலை:திருவண்ணாமலை அவலுார்பேட்டை சாலையில் நேற்று, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில், 1,100 இலவச வேட்டி, சேலைகள் இருந்தன.
இது தொடர்பாக, ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் இருந்தவரிடம் போலீசார் விசாரித்தனர்.அவர்கள், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இரவு வாட்ச்மேனாக பணிபுரியும் வட ஆண்டாப்பட்டையை சேர்ந்த துவாரகேசன், 28, ஆட்டோ டிரைவர் பரசுராமன், 35, என்பது தெரிந்தது.
மேலும், பொங்கல் பண்டிகையின்போது வழங்கியது போக, தாலுகா அலுவலகத்தில் இருந்த, அரசின் இலவச வேட்டி, சேலைகளை திருடி, விற்பனைக்கு அவர்கள் எடுத்து சென்றது தெரிந்தது.
திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ், திருவண்ணாமலை கிழக்கு போலீசில் கொடுத்த புகார்படி, துவாரகேசன், ஆட்டோ டிரைவர் பரசுராமன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.