வானூர்-ஆரோவில் அருகே அனுமதியின்றி மரத்தை வெட்டி திருடிச்சென்றதாக நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரோவில் அடுத்த இடையன்சாவடி பனக்காட்டுத்தெருவை சேர்ந்தவர் செங்கணேி. இவரது மனைவி இந்திரா, 41; இதில் செங்கேணிக்கு, அவரது மாமனார், மொரட்டாண்டி காளிக்கோவில் எதிரில் 60 சென்ட் நிலத்தை தானசெட்டில்மென்ட் கொடுத்துள்ளார்.
அந்த நிலத்தில், பென்சில் மரங்கள் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி செங்கேணியின் மனைவி இந்திரா, அந்த நிலத்தை பார்வையிட சென்றபோது, அவரது உறவினர்களான இடையன்சாவடியை சேர்ந்த மேகநாதன், அவரது மனைவி ராஜலட்சுமி, மகன் ஜெகதீஷ் மற்றும் உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் ஆகியோர் கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால், பென்சில் மரங்களை வெட்டியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட இந்திராவை அவர்கள், தாக்க வந்ததோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதன் பிறகு அங்கிருந்து இந்திரா வீட்டிற்கு வந்துள்ளார். நிலத்தில் இருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பில் பென்சில் மரத்தை வெட்டி எடுத்து சென்றனர்.
இது குறித்து செங்கேணி, ஆரோவில் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் ஆரோவில் போலீசார் மேகநாதன், ராஜலட்சுமி, ஜெகதீஷ், கிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.