ஊட்டி:ஊட்டியில் தொடரும் பனிப்பொழிவால், 400 ஏக்கரில் கேரட் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், தேயிலைக்கு அடுத்த படியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கேரட் விவசாயம் ஆண்டுக்கு மூன்று போகம் பயிரிடப்படுகிறது.
ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் கேரட்டுக்கு நல்ல ருசி இருப்பதால், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
நடப்பாண்டு உறைபனி பிப்., இரண்டாவது வாரம் வரை தொடர்வதால் மலை காய்கறிகள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
அக்., முதல் பிப்., வரை நடந்த கேரட் விவசாயத்தில், உறைபனி தாக்கத்தால் செடிகள் வளர்ச்சியிழந்து அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் கேரட் கொள்முதல், 40 சதவீதமாக குறைந்துஉள்ளது. மஞ்சனகொரை, எம்.பாலாடா, கல்லக்கொரை ஹாடா, இத்தலார், எமரால்டு, சோலுார், தும்மனட்டி பகுதிகளில், 400 ஏக்கரில் கேரட் பயிர் வளர்ச்சியிழந்து அறுவடை பாதித்துள்ளது.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''ஊட்டியில் சில பகுதிகளில் கேரட் செடிகள் வளர்ச்சியிழந்து அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்,'' என்றார்.