விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 183 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கடந்த 2021--22ம் ஆண்டு முதல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம பஞ்சாயத்துகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தி, அக்கிராமப் பஞ்சாயத்துகளை தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும், வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும், மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நடப்பாண்டில், இத்திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 183 கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் சர்க்கரைத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களைத் தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது, வேளாண் தொடர்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி, கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தேர்வு செய்யப்பட்ட 183 கிராம
பஞ்சாயத்துகளில் உழவர்களுக்கான முகாம் இன்று (பிப்.9) நடைபெற உள்ளது. இம்முகாம்களில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்குதல், உழவன் செயலியை விவசாயிகளின் கைபேசியில் பதிவிறக்கம் செய்து இடுபொருள் தேவையை பதிவு செய்தல், பயிர் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல், பி.எம்.கிசான் திட்டத்தில் புதிய நபர்களை இணைத்தல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை பெறுதல், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றம் குடல்புழு நீக்கம் போன்ற சேவைகள் மட்டுமல்லாது இத்திட்டத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட இடுபொருட்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
முகாம் நடைபெறும் நாட்களில், வேளாண்மை துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர். எனவே, தேர்வு செய்யப்பட்ட 183 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் இம்முகாம்களில் பங்குபெற்று பயன்பெறலாம்.
கூடுதல் விபரம் பெற, வேளாண் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.