நிலக்கோட்டை--பொதுப் பணித்துறை வாய்க்கால் உடைப்பு,தனது சொந்த பணிக்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்தியது என குல்லிசெட்டிபட்டி ஊராட்சி தலைவர் வைகை பாலன் மீது போலீஸ், பி.டி.ஒ., விடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
குல்லிசெட்டிபட்டி ஊராட்சி தலைவராக உள்ள இவர் பூஞ்சோலை செல்லும் பாதையை சரி செய்வதற்காக தனது நிலத்திற்கு பாதை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக 100 நாள் வேலை திட்ட பயனாளர்களை பயன்படுத்தியது அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.
பாதை அமைக்கும் போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு கால்வாய் மடையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். பொதுப்பணித்துறையினர் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.
இது போல் தனது நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் தனியார் ஒருவரும் புகார் செய்து உள்ளார்.
ஊராட்சி துணைத் தலைவர் இளங்கோவன் ஒன்றிய அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் ,''100 நாள் திட்ட பயனாளர்களைக் கொண்டு தனது 80 ஏக்கர் நிலத்தை சீர்படுத்தி வருகிறார்.
தனது நிலத்திற்கு பாதை அமைத்த போது பொதுப்பணித்துறை மடை , வாய்க்கால் கரையை சேதப்படுத்தி உள்ளார்,'' என, குறிப்பிடப்பிட்டுள்ளார்.
பொதுப்பணி துறையினர் புகாரை தொடர்ந்து நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, நில அளவீடு செய்த போது ஆக்கிரமித்து இருந்த பொதுப்பணித்துறை நிலம் அடையாளம் காணப்பட்டது.