திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்ட சுற்றுப்பகுதிகளில் கைவிடப்பட்ட கல்குவாரிகளில் உள்ள குட்டைகளில் தேங்கி உள்ள மழை நீரில் மூழ்கி பலரும் உயிர்களை பறிகொடுக்கின்றனர்.இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவள அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் இந்நிலை தொடர்கிறது.
திண்டுக்கல்,நத்தம்,கன்னிவாடி,வடமதுரை என பல பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் மலை பாறைகளை வெடி வைத்து தகர்க்கின்றனர்.அப்போது பல இடங்களில் பள்ளங்கள் உருவாக காலப்போக்கில் அப்பள்ளங்களில் நீர் தேங்கி குட்டைகளாக உருவாகிறது.
குவாரிகளை பொருத்தவரை சிலர் அனுமதியுடன் பலர் அனுமதியின்றி நடத்துகின்றனர். இக்குவாரிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்தினர் அதிகளவில் மலை பாறைகளை உடைத்து விற்கின்றனர்.இதில் சிலர் கல்குவாரிகளை நடத்த முடியாமல் அப்படியே விட்டு செல்வதும் உண்டு.
இக்குவாரிகளில் அவர்கள் உருவாக்கிய குட்டைகளில் மழை நீர் தேங்கி கேட்பாரற்று கிடக்கிறது.இதில் மீன்களும் வளர்கின்றன.இதை பிடிக்க ஆபத்தை உணராத சிறுவர்கள் கல்குவாரி குட்டை களுக்கு செல்கின்றனர்.அங்குள்ள குட்டைகளில் இறங்கி மீன் பிடிக்கும் போது நீச்சல் தெரியாமல் மூச்சித்திணறி இறக்கின்றனர்.
இதோடு தற்கொலை செய்யவேண்டும் என தீர்மானிப்பவர்களும் ஆள் அரவம் இல்லாமல் இருக்கும் இக்கல்குவாரிகளை தான் தேர்வு செய்கிறார்கள்.
இதனால் கல்குவாரிகளில் உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்கிறது. குவாரிகளால் பல பாதிப்புகளை உணரும் சுற்றுப்பகுதி மக்கள் இதை எதிர்த்து போராடுவதும் நீடிக்கிறது.
இதை தடுக்க வேண்டிய கனிமவள அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர். இதன்மீது மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுங்க
சதீஸ்குமார், தனியார் ஊழியர்,திண்டுக்கல்: அனுமதியில்லாமல் திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் நடத்தப்படும் கல்குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.குட்டைகள் உருவாகாமல் இருக்கும் வகையில் கல்குவாரிகள் நடத்துவோரிடம் அறிவுரைகள் கொடுக்க வேண்டும்.பயன்பாடில்லாமல் கிடக்கும் கல்குவாரிகளை மூட வேண்டும்.மக்கள் உயிரிழப்புகளை தடுக்க அதிகாரிகளும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடை விதிக்க வேண்டும்
ஜீவரத்தினம், சமூக ஆர்வலர், திண்டுக்கல்: கல்குவாரிகள் மூலம் கனிம வளங்கள் பூமியிலிருந்து சுரண்டப்படுகிறது.அதிக திறன்கொண்ட வெடிகளை பயன்படுத்தி மலைகளை உடைக்கின்றனர்.இதன்மூலம் பெரும் சத்தம் வருகிறது.மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இந்த சந்தத்தால் பறவைகள் இனங்கள் அழிய வாய்ப்புள்ளது.
கல்குவாரிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
அதிகாரிகள் அலட்சியம்
சுந்தராஜ், தனியார் ஊழியர்,கொத்தம்பட்டி, திண்டுக்கல்: அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் தொடர்ந்து இதுபோன்று உயிரிழப்புகள் கல்குவாரிகளில் நடக்கிறது.
எத்தனை முறை விபத்துக்கள் நடந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு இதற்கோர் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவாரி குட்டைகளை சுற்றி வேலி
மாரியம்மாள்,கனிமவள உதவி புவியியலாளர், திண்டுக்கல்: மாவட்டத்தில் கை விடப்பட்டுள்ள குவாரிகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
அவற்றை கணக்கெடுத்து அதிக ஆளம் கொண்ட குட்டைகளை சுற்றி வேலி அமைக்கப்பட்டு, மக்கள் செல்ல முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி இங்கு தேங்கி உள்ள தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாமா என்ற ஆய்வும் நடக்கிறது, என்றார்.