கோவை : கோவை மாவட்டத்தில், விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் டி.ஆர்.ஓ., - ஊராட்சிகளின் உதவி இயக்குனர், மாவட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு அதிகாரிகள் இல்லை. இதனால், அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
டி.ஆர்.ஓ., இல்லை
மிக முக்கியமாக, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த, ரூ.1,132 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது. இதில், 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டன. மீதமுள்ள நிலங்கள் யாருக்கு சொந்தம் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கிறது; கோர்ட்டில் தொகையை செலுத்தி, கையகப்படுத்த வேண்டும். அதேபோல், அரசுக்கு சொந்தமான நிலங்களை வகைப்படுத்தி, வகை மாற்றம் செய்ய வேண்டும்.
இதற்கான டி.ஆர்.ஓ., பணியிடம் காலியாக இருப்பதால், டி.ஆர்.ஓ., (முத்திரைத்தாள்) செல்வசுரபிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
டி.எஸ்.ஓ., பணியிடம் காலி
கோவை மாவட்டத்தில், 1,403 ரேஷன் கடைகள் உள்ளன. 11 லட்சத்து, 37 ஆயிரத்து, 947 கார்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், இருப்பு விபரங்களை கண்காணித்து, பொதுமக்களுக்கு பற்றாக்குறையின்றி வினியோகிக்கும் பொறுப்பு, மாவட்ட வழங்கல் அலுவலரை சேர்ந்தது. இவருக்கு, நுகர்வோர் பாதுகாப்பு பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. காஸ் சிலிண்டர் வினியோகம், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும். இப்பணியிடமும் காலியாக இருக்கிறது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவக்குமாருக்கு, இப்பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டப்பணிகள்) பணியிடத்தையும் கூடுதலாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதவி இயக்குனரும் இல்லை
மாவட்டத்தில், 228 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், 1,200 குக்கிராமங்கள் உள்ளன. ஜல் ஜீவன் திட்டம், அனைவருக்கும் வீடு, பண்ணை குட்டை அமைத்தல், கால்நடைத்துறை திட்டங்கள், நீர் நிலைகள் துார்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊராட்சி மற்றும் ஒன்றிய அளவில் அலுவலர்கள் இருந்தாலும், அனைத்து பகுதிகளிலும் திடீர் ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு, ஊராட்சிகளின் உதவி இயக்குனரை சேர்ந்தது. இப்பணியிடமும் காலியாக இருப்பதால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சி) கமலக்கண்ணன் கூடுதலாக கவனித்து வருகிறார்.
மருத்துவ விடுப்பில் அதிகாரி
மாவட்ட வழங்கல் அலுவலராக இருந்த சிவகுமாரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக மாற்றப்பட்டார். சில நாட்கள், இப்பொறுப்பை ஏற்காமல் இருந்தார். தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்ததும், ஆதிதிராவிடர் நல அலுவலர் பொறுப்புக்கு மாற்றப்பட்டு, மாவட்ட வழங்கல் அலுவலர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. தற்போது, சிவகுமாரி மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். அதனால், ஆதிதிராவிடர் நல அலுவலர் பொறுப்பு, 'தாட்கோ' மேலாளருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குனர் அந்தஸ்தில், ஊரக வளர்ச்சி (உட்கட்டமைப்பு) உதவி திட்ட அலுவலர், மகளிர் திட்டம், ஊரக வாழ்வாதார இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன.
இதுதொடர்பாக, கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டதற்கு, ''நமது மாவட்டத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்தது. துணை கலெக்டர் அந்தஸ்திலும் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அரசின் கவனத்துக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்,'' என்றார்.