மதுரை : பயிற்சியில்லாத அரசுப் பள்ளி மாணவர்களுடன் விடுதி மாணவர்களை (எஸ்.டி.ஏ.டி.,) மாநில போட்டிக்கு அனுமதிக்கக்கூடாது; அவர்களுக்கு மாநில அளவில் தனியாக போட்டி நடத்த வேண்டும் என, அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அரசுபள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.,) கீழ் 16 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டில் ஆர்வமுள்ள திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கவைத்து அருகிலுள்ள பள்ளிகளில் படிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தினமும் காலை, மாலை தலா 2 மணி நேரம் விளையாட்டுக்கான தொழில்நுட்ப பயிற்சி, 'வார்ம்அப்' பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரப்பட்டியல் படி, மூன்று வேளையும் அரசு நிர்ணயித்த சத்தான உணவு, விளையாட்டு சீருடை, ஷூ, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தடகளம், கபடி, கூடைபந்து, வாலிபால் என ஒவ்வொரு விளையாட்டுக்கு தனியாக பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசுப்பள்ளி, உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் படிக்கின்றனர். அவர்கள் சத்தான உணவை சாப்பிடுவதற்கான அளவுகோல் எதுவுமில்லை. பயிற்சி தருவதற்கும் பயிற்சியாளர் இல்லை. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் தான் அனைத்து விளையாட்டுக்கும் பயிற்சி அளிப்பவராக உள்ளார். உதாரணமாக உடற்கல்வி ஆசிரியர் தடகளத்தில் சிறந்தவராக இருந்தால், தடகளத்தில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கமுடியும். அவரால் கபடி போட்டிக்கோ, கூடைபந்து போன்ற குழு போட்டிகளுக்கோ தொழில்நுட்ப பயிற்சி அளிக்க முடியாது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் தடகள, குழு விளையாட்டுகளில் வெற்றி பெறும் மாணவர்கள் நேரடியாக மாநிலப் போட்டிகளுக்கு தகுதி பெறுகின்றனர். எஸ்.டி.ஏ.டி., விடுதி மாணவர்கள் நேரடியாக மாநில போட்டிகளில் பங்கேற்கின்றனர். பயிற்சி, சத்தான உணவு, சரியான கவனிப்புடன் உள்ள எஸ்.டி.ஏ.டி., மாணவர்களுடன் எந்த அடிப்படை வசதியும் பயிற்சியும் இல்லாத அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மோதி ஜெயிக்க முடியவில்லை. பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் விடுதி மாணவர்களே பெறுகின்றனர்.
மண்டல அளவில் அரசுப்பள்ளி, பிற பள்ளி மாணவர்கள் ஜெயித்தால் விளையாட்டு கோட்டாவில் 30 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மாநிலப் போட்டிகளில் ஜெயிக்காத நிலையில் பங்கேற்பு சான்றிதழுக்காக 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இவர்களுக்கான முன்னுரிமை பாதிக்கப்படுகிறது.
அரசுப்பள்ளி, பிறபள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் விளையாட்டுத்துறையில் வலிமையான நிலையில் உள்ள எஸ்.டி.ஏ.,டி., மாணவர்களுக்கு மட்டும் தனியாக மாநில அளவில் போட்டிகள் நடத்த வேண்டும் என்றனர்.