கோவை : கோவை மாவட்ட போலீசார் நேற்று நடத்திய அதிரடி கஞ்சா வேட்டையில், கஞ்சா மட்டுமல்லாது, 'அவுட்டு காய்' எனப்படும் நாட்டு வெடி பொருள், நாட்டுத் துப்பாக்கி மற்றும் லாட்டரி சீட்டுகள் பிடிபட்டன.
கஞ்சா சாக்லெட்
இந்தக் குழுவினர் நேற்று அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். 105 நபர்களிடம் மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்வில் ஒன்பது பேரிடம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், 28 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் (கூல் லிப்) வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், மேட்டுப்பாளையம் பகுதியில், அவுட்டுக் காய் வைத்திருந்த கல்லுாரி மாணவர் பிரபாகர், 20 உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4 அவுட்டு காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.காரமடை பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஷெட்டி சிங், 58, ராமராஜ்,30, ஜிந்தா,33 ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், லாட்டரி சீட்டு விற்பனைக்கு வைத்திருந்த நபரிடம் இருந்து 600 லாட்டரி சீட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர் குற்றத்தில் ஈடுபடும் 25 நபர்களிடம் இருந்து, நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு, அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என, எஸ்.பி., பத்ரிநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை குறித்து, கோவை மாவட்ட மக்கள் தயங்காமல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9498181212 என்ற எண்ணில் அழைக்கலாம். 7708100100 என்ற எண்ணில் 'வாட்ஸ்ஆப்' வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.