திருப்பூர் : ''ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டுள்ளதால், வட்டி சமன்படுத்தும் திட்ட மானியத்தை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்,'' என்று, இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த, மே மாதம், 4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், ஒன்பது மாதங்களில், ஆறுமுறை உயர்ந்து, 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:
ரெப்போ ரேட் உயர்ந்தால், வட்டி விகிதம் அதிகரிக்கும் என்பதால், வட்டி சமன்படுத்தும் திட்டத்தில் வழங்கும் வட்டி மானியத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, 5 சதவீதமாகவும், மற்றவர்களுக்கு 3 சதவீதமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
அன்னிய செலாவணியில், முன் ஏற்றுமதி கடன் காலத்தை, 180 நாட்களில் இருந்து, 365 நாட்களாக உயர்த்த வேண்டும்.
மத்திய அரசு, ஏற்றுமதி மறு நிதியளிப்பு வசதியை நீட்டித்து கொடுக்க வேண்டும். ஏற்றுமதியாளர் வெளிநாட்டு பணமதிப்பின் அடிப்படையில் கடன் பெற்று, வட்டி உயர்வை சமாளிக்கலாம்.
'ரெப்போ ரேட்' உயரும் போது, ரிசர்வ் வங்கி மறுநிதியளிப்பு செய்து, வட்டி உயர்வு ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால், ஏற்றுமதியாளர்களின் வட்டி செலவு கட்டுக்குள் இருக்கும்; சர்வதேச போட்டிகளை சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.