பல்லடம் : மின் கட்டண நிலுவை அதிகளவில் உள்ளதால், விசைத்தறியாளர்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விசைத்தறிக்கான, 750 யூனிட் இலவசம் மின்சாரம், 1,000 யூனிட்டாக வழங்கப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இது விசைத்தறியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் கடந்த நான்கு மாதங்களாக விசைத்தறி கூடங்களுக்கான மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்தவில்லை. அரசு, வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக, கட்டணம் நிலுவையில் இருந்தும், மின்வாரிய நடவடிக்கை பாயவில்லை. ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும், ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் நிலுவையில் உள்ளது.
விசைத்தறியாளர்கள் கூறுகையில், 'விசைத்தறி கூடம் ஒன்றுக்கு சராசரியாக, 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வரும். ஆறு மாத மின் கட்டணம் நிலுவையில் உள்ளது. இத்துடன், செலுத்தாத தொகைக்கான அபராதமும் ஆயிரக்கணக்கில் வரும் என்பதால், ஒட்டுமொத்தமாக செலுத்துவது கடினம்' என்றனர்.
சோமனுார் விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி கூறுகையில், 'நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை, தவணை முறையில்தான் செலுத்த இயலும். இது குறித்து அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்' என்றார்.