கோவை : நான்கு மாதங்களாக ஊதியம் பெறுவதில் சிக்கல் நீடிக்கும்போது, பேனா சிலை வைக்க நிதி எங்கிருந்து வந்தது என, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறுவதற்கு, 20ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவிடுவது வழக்கம். ஜன. மாத ஊதியத்திற்கான பில் சமர்பிக்க, போதிய கால அவகாசம் வழங்காததால், 70 சதவீத ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு, தற்போது வரை ஊதியம் வழங்கப்படவில்லை.
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க, நிதியில்லாத நிலையில், மெரினாவில் பேனா சிலை அமைக்க மட்டும், 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது எப்படி என, ஆசிரியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதுசார்ந்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, நேற்று குரல்வழி பதிவு செய்தி அனுப்பியுள்ளார்.
இதில், 'உதவிபெறும் பள்ளிகளை பொறுத்தவரை ஊதியம் பெறுவதில் இருந்த சிக்கல்கள் களையப்பட்டுள்ளன. இதுவரை ஆவணங்கள் சமர்பித்திருந்தாலும், திருப்பி அனுப்பப்பட்டிருந்தாலும், ஊதியம் பெறுவதற்கு ஆவன செய்யப்படும். தணிக்கை சிக்கல் வராது.
அனைத்து பட்டியலும் சமர்பித்து, நாளைக்குள் ஊதியம் பெற்று தர வேண்டும். எந்த டி.இ.ஓ.,வும் விடுப்பு எடுக்க கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சொல்வது என்ன?
அருளானந்தம், மாநில தணிக்கையாளர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்: பள்ளிக்கல்வித்துறையில் சமீபத்தில் கல்வி மாவட்ட எல்லைகள் ஒருங்கிணைத்து, தொடக்க, இடைநிலை, தனியார் பள்ளிகளுக்கு, பிரத்யேக மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எந்த துறை தலைவரின் கீழ் ஊதியம் வழங்கப்படுகிறது என, கருவூலத்துறையில் தகவல்களை, 'அப்டேட்' செய்ய வேண்டும். இதை செய்யாததால், நான்கு மாதங்களாக, ஆசிரியர்கள் சிலர் முறையாக ஊதியம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
கல்வி மாவட்ட எல்லை ஒருங்கிணைத்து அரசாணை வெளிட்டபோதே, கருவூலத்துறையில் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்கான முறையில் மாற்றங்கள் செய்திருக்க வேண்டும். மேல்மட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால், ஆசிரியர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகிறோம்.
பழனிவேல், மாநில தலைவர், தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம்: அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, வழக்கமாக மார்ச் மாதம் ஊதியம் பெறுவதில் தாமதம் ஏற்படும். ஆனால், தற்போது ஜன., மாதத்தில் இருந்தே, இப்பிரச்னை துவங்கிவிட்டது. நிதியின்மை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் போதுமான திட்டமிடல் இருந்திருக்க வேண்டும். இதை செய்யாமல், பேனா சிலை வைப்பதற்கு நிதி ஒதுக்கியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.