கரூர்: கரூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தவறாக தேர்தல் நடத்தியதன் காரணமாக, அரசு அலுவலர்கள், 2 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின்போது, சித்தலவாய் பஞ்., 6வது வார்டு உறுப்பினருக்கான பதவியானது பொது (பெண்கள்) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த, 2019 தேர்தலில், இப்பதவிக்கான வேட்பு மனுக்களை பெற்றபோது இடஒதுக்கீடு அடிப்படையில் பெறாமல், பொதுப்பிரிவினருக்கு, அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, கரூர் மண்டல உதவியாளருமாக இருந்த சிவக்குமார், வேட்பு மனுக்களை பெற்றது மட்டுமின்றி, தேர்தல் நடத்தப்பட்டு, ஓட்டு எண்ணிக்கையும் நடந்தது.
தொடர்ந்து, ஆண் வேட்பாளர் வெற்றி பெற்றதாக, அப்போதைய தேர்தல் நடத்தும் அலுவலரும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருமான வெங்கடாசலம் என்பவரால், தேர்தல் முடிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் குறைபாடுகளுடன் செயல்பட்டதால், தற்போது கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் வெங்கடாசலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சென்னை தெற்கு மண்டலத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சிவக்குமார் ஆகியோரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.
தவறாக தேர்தல் நடத்தியதன் காரணமாக, இரண்டு பேரும் அரசு பணியிலிருந்து நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.