கரூர்: கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், திருமண மண்டபம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கரூர் - சேலம் பழைய சாலையில், வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. அப்போது, கோவிலை சுற்றி தேரோட்டமும் நடப்பது வழக்கம். கோவிலை சுற்றியுள்ள சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக இருந்தது. இதனால், தேரோட்டத்தின் போது, பக்தர்கள் தேரை எளிதாக இழுத்து செல்ல முடியாமல் தடுமாறினர்.
மேலும், விசேஷ நாட்களில் மலையை சுற்றி வர முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், கோவிலை சுற்றியுள்ள மண் சாலையை, தார் சாலையாக மாற்ற வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவிலை சுற்றி தார் சாலை அமைக்கப்பட்டு, அம்மா பூங்கா வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ஏழை, எளிய மக்கள் திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் நடத்தும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், திருமண மண்டபம் கட்டும் இறுதி கட்ட பணிகள் கிடப்பில் உள்ளன.
மண்டபம் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, திருமண மண்டப பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.