கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியம், மணவாடியில் பஞ்., தலைவர்களுக்கான நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
பஞ்., தலைவர்களுக்கு நிதிகளை கையாளும் அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது. அது மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, அரசியல் அமைப்பு சாராத தேர்தல் மூலம் பஞ்., தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
கிராமத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளுக்கே சென்று குப்பையை தரம் பிரித்து, சேகரிக்க வேண்டும். கிராம பகுதிகளில் அவசியமான வளர்ச்சி பணிகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பெண் பஞ்., தலைவர்கள் தாங்களாகவே செயல்பட முன் வர வேண்டும். சமையல் செய்கிறோம், குழந்தைகளை வளர்க்கிறோம், வீட்டை நிர்வகிக்கிறோம். அதுபோல ஒரு கிராமத்தையும் நம்மால் நிர்வகிக்க முடியும் என, பெண் பஞ்., தலைவர்கள் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர், பேசினார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.