எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்.,ல், குடிநீர் கட்டணம் செலுத்தாத, 35 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு டவுன் பஞ்., மூலம் 2,314 தனிநபர் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, தினமும் குடிநீர்
வினியோகம் செய்யப்பட்டு
வருகிறது.
இந்நிலையில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்களில், 40 சதவீதம் பேர் கடந்த, 8 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இதனால், டவுன் பஞ்., மூலம் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு கடந்த ஜன., 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, கால அவகாசம் முடிந்தும் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து எருமப்பட்டி டவுன் பஞ்., செயல் அலுவலர் சத்திவேல் கூறியதாவது:
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல், 60 சதவீதம் பேர் மட்டுமே முறையாக குடிநீர் கட்டணம் செலுத்தி வருகின்றனர். மீதம் உள்ளவர்களுக்கு பல முறை தவணை கொடுத்தும் கட்டாமல் உள்ளனர். இதனால் கடந்த, 4 நாட்களில், 35 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.