வெண்ணந்துார்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் சுற்று பகுதி கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மக்கள், சரக்கு ஆட்டோவில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
வெண்ணந்துாரை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வெண்ணந்துார் பகுதியில் இருந்து அருகில் உள்ள ராசிபுரம் தாலுகா மற்றும் இளம்பிள்ளை, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே பஸ் செல்லும் கிராமங்கள் உள்ளன. கிராம பகுதிகளுக்கு போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால், மக்கள் சரக்கு ஆட்டோக்களை நம்பியுள்ளனர். சரக்கு ஆட்டோ வைத்துள்ளவர்களும், சரக்குகளை ஏற்றி செல்வதற்கு பதிலாக ஆட்களை ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் ராசிபுரம் அருகே, ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எனவே, கிராம பகுதிகளுக்கு போதிய பஸ்களை இயக்கவும், சரக்கு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி செல்வதை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.