ஓசூர்: ஓசூரில், உதான் திட்ட விமான சேவையை நீக்குவதாக, மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளதாக வெளியான தகவல், தொழில்முனைவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாட்டில், இரண்டாம் கட்ட நகரங்களில் விமான சேவையை துவங்க வேண்டும் என்ற முடிவை எடுத்த, மத்திய விமான போக்குவரத்துத்துறை, கடந்த, 2016ல் உதான் உதே திட்டத்தை அறிவித்தது. அதில், ஓசூரில் விமான சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓசூரில் தனியாக விமான நிலையம் இல்லாததால், சேவை துவங்கவில்லை.
ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில், விமான உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனமான, 'தால்' நிறுவனத்திலிருந்து, விமானங்கள் சென்று வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான கட்டமைப்புகளை செய்ய, 'தால்' நிறுவனம் முன்வரவில்லை. தமிழக அரசும்
மவுனம் காத்தது.
இந்நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தேவை மதிப்பீடு, விமான போக்குவரத்து முன்னறிவிப்பு மற்றும் சாத்தியமான இடங்களை அடையாளம் காண, ஆலோசகர்களை கடந்த, 2021 டிசம்பரில் அழைத்தது. இது, ஓசூர் பகுதி தொழில்முனைவோரை மகிழ்ச்சியடைய செய்தது.
இதற்கிடையே, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தை சுற்றி, 150 கி.மீ., துாரத்திற்கு எந்த விமான நிலையத்திற்கும், 2033 வரை அனுமதி கொடுக்கக்கூடாது என, (மைசூரு, ஹாசன் விமான நிலையங்கள் தவிர) மத்திய அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதனால், 75 கி.மீ., தொலைவிலுள்ள ஓசூரில் விமான நிலையம் அமைக்க, பெங்களூரு விமான நிலையத்திடம் தடையின்மை சான்று வாங்க வேண்டிய கட்டாயம் உருவானது.
ஆனால், பெங்களூரு விமான நிலையம் தடையின்மை சான்று வழங்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவிற்குள் ஓசூர் அமைந்துள்ளதால், உதான் உதே திட்டத்தில் இருந்து, ஓசூர் விமான நிலையம் நீக்கப்பட்டதாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, ஓசூர் பகுதி தொழில்முனைவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஓசூரிலிருந்து சென்னைக்கு குறைந்த கட்டணத்தில் செல்லலாம் என காத்திருந்த மக்களுக்கும், இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, தொழில் நகரான ஓசூரிலிருந்து, கார்கோ விமானங்கள் இயங்கப்பட்டால், ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும் என, தொழில்முனைவோர் தெரிவித்து வந்த நிலையில், விமான சேவையே கேள்விக்குறியாகியானதால், தொழில்முனைவோர் வருத்தத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக, டான்சியா சங்க இணை செயலாளர் ஞானசேகரனிடம் கேட்டபோது, ''தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படைகளை பெறவே போராட வேண்டியுள்ளது. முதலீட்டாளர்கள் விருப்பமான நகராக, ஓசூர் இருப்பதாக, பெருமையாக சொல்கின்றனர். ஆனால், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதை மத்திய அரசு கைவிடுவது, தொழில் வளர்ச்சிக்கு உகந்ததா என தெரியவில்லை. ஓசூர் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல, விமான சேவை கட்டாயம். அதனால், மத்திய அரசு பெங்களூரு விமான நிலையத்திடம் தடையின்மை சான்று பெற்று, ஓசூரில் விமான நிலையம் அமைக்க முன்வர வேண்டும்,'' என்றார்.