வேலுார்: ''காட்பாடியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே சேர்க்காட்டில், 12.46 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கான புதிய கட்டடம் மற்றும் புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி பேசும் போது, ''சேர்க்காட்டில் சிப்காட் மற்றும் காட்பாடியில் 100 ஏக்கரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.காட்பாடியில் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கு இந்தாண்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற 22 மாதங்களில், 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் புதிதாக தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான், பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கல்லுாரிகளில் மாணவியர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கல்லுாரிகளில் படிக்கும் போதே, மாணவியருக்கு வேலை அளிக்க பல்கலைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.