திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், தாய், மகன் உட்பட மூவர் பலியாகினர். இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 42. இவரது மனைவி காமாட்சி, 40. இவர்களின் மகன்கள் சக்திவேல், 15, சஞ்சய், 13.
சக்திவேலுக்கு உடல் நலம் பாதித்ததால், அவனை அழைத்துக் கொண்டு 'டொயோட்டோ எடியாஸ்' காரில், திருவண்ணாமலை தனியார் மருத்துவமனைக்கு நான்கு பேரும் சென்றனர். காரை டிரைவர் இளையராஜா, 29, ஓட்டினார்.
சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திருவண்ணாமலை - பெங்களூரு சாலையில், பெரிய கோளாப்பாடி அருகே கார் வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த சரக்கு லாரி கார் மீது மோதியது.
இதில், கார் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில், காமாட்சி, சக்தி வேல், இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த செல்வம், சஞ்சய் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.