திருநெல்வேலி:'திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, 18 சதவீதம் கமிஷன் கொடுத்தால், நெடுஞ்சாலை உள்ளிட்ட ஒப்பந்த பணிகள் கிடைக்கும்' என, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தி.மு.க., நகர செயலர் பேசிய, 'வீடியோ' பரவி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் இல்லாததால், ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், திருநெல்வேலிக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி நகர செயலராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் சுப்ரமணியன். தன் ஆதரவாளரான இவரது கட்சி அலுவலகத்தை, திருநெல்வேலியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
இந்நிலையில், சுப்ரமணியனை நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் ஒருவர் சந்தித்து பேசிய வீடியோ, வேகமாக பரவி வருகிறது.
அதில், 'திருநெல்வேலியில் நடக்கும் ஒப்பந்த பணிகளுக்கு பொறுப்பு அமைச்சருக்கு, 18 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும். கமிஷனை தந்தால் கான்ட்ராக்ட் கிடைத்து விடும்' என, சுப்ரமணியன் பேசுகிறார்.
அமைச்சர் கேட்க சொன்னதாக கூறி, சுப்ரமணியன் கமிஷன் கேட்கும் வீடியோ தி.மு.க.,வினராலேயே அதிகமாக பரப்பப்படுகிறது.
திருநெல்வேலி மேயர் சரவணனுக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள், 30க்கும் மேற்பட்டோர், மாநகர பணிகளில் சரிவர கமிஷன் கிடைக்காததால், சமீபத்தில் திருச்சி, சென்னையில் தி.மு.க., மேலிட நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர்.
தற்போது நகர செயலர் சுப்ரமணியன் கமிஷன் கேட்கும் வீடியோ பரவி, திருநெல்வேலி தி.மு.க.,வை கலங்கடித்துள்ளது.