மதுரை, : தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பெயருக்கு உடற்கல்வி தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது. தனி பாடத்திட்டம் அமைப்பதோடு பள்ளிகளில் விளையாட்டுக்கு முன்பு போல தனியாக நிதி ஒதுக்க விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி முன்வர வேண்டும்.
ஆறு முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட அளவில் உடற்கல்வி தேர்வு நடத்தப்படுகிறது. விளையாட்டு தொடர்பான பொதுஅறிவு கேள்விகள் கேட்கப்படுகின்றன. விடைத்தாள் திருத்தப்பட்டாலும் பொதுத்தேர்வு மதிப்பெண்ணோடு சேர்க்கப்படாததால் மாநில அளவில் ஒரே பாடத்திட்டம் அமைக்க வேண்டும் என்கின்றனர் உடற்கல்வி ஆசிரியர்கள்.
அவர்கள் கூறியதாவது:
அனைத்து பாடத்திற்கான புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், செருப்பு வரை அரசு இலவசமாக தருகிறது. 6 ம் வகுப்பு முதல் உடற்திறன் தகுதி தேர்வு வைக்கப்பட்டு மாணவர்கள் குறிப்பிட்ட விளையாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் மாநில அளவில் விளையாட்டு தொடர்பான பொது பாடத்திட்டமோ, புத்தகமோ 20 ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கவே இல்லை. தனியாக பாடத்திட்டம் தயாரிக்க வேண்டும். மற்ற பாடங்களைப் போல இதற்கும் தேர்வு வைத்து பொதுத்தேர்வு மதிப்பெண்ணோடு சேர்க்க வேண்டும்.
விளையாட்டு நிதி தனியாக தேவை:
முன்பு, விளையாட்டுக்கு தனியாக நிதி ஒதுக்கி வழங்கப்பட்டதால் மைதானத்திற்கு தேவையான உபகரணங்கள், மாணவர்கள் மண்டல அளவிலான விளையாட்டுக்கு செல்வதற்கான பயணபடி செலவுகளை மேற்கொண்டோம். இப்போது பொது நிதியாக வருவதால் பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டுக்கு மிகக்குறைந்தளவே நிதி ஒதுக்கப்படுகிறது. மைதானத்தில் மாணவர்கள் விளையாட என்ன தேவை என்பதை யாருமே கேட்பதில்லை. 200 மீட்டர் டிராக் அமைக்க ஒன்றரை ஏக்கர் நிலம் தேவை. அதுபோன்ற மைதானங்கள் மிக குறைவு. இருக்கும் சொற்ப இடத்தில் கபடி, டென்னிஸ் கோர்ட், வாலிபால், கோகோ கோர்ட் என ஒன்றிரண்டு தான் அமைக்க முடியும்.
பள்ளிகளில் மைதானத்திற்கான இடவசதி அறிந்து அதற்கேற்ப அரங்கு அமைக்கவும், விளையாட்டுக்கு முன்பு போல தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றனர்.
விளையாட்டு துறையை முன்னெடுத்து செல்ல விளையாட்டு அமைச்சர் உதயநிதி முன்வருவாரா.