சென்னை, சென்னை அடுத்த மாங்காடு, அடிசன் நகர், ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வராஜ், 65; இசை பயிற்சி ஆசிரியர்.
இவரது மனைவி சாந்தி, 55; துணை நடிகை. இவர்களுக்கு, ராஜேஷ் பிராங்கோ, 40, பிரகாஷ், 32, என்ற இரண்டு மகன்களும், பெட்ரீஷா பவா பிரியா, 38, என்ற மகளும் உள்ளனர்.
ராஜேஷுக்கு திருமணமாகி, படப்பையில் வசிக்கிறார். பிரியாவிற்கு திருமணமாகி, அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடைசி மகன் பிரகாஷுக்கு திருமணமாகவில்லை. சினிமாத் துறையில் 'டப்பிங்' கலைஞராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை அக்கா பிரியாவின் வீட்டிற்கு சென்ற பிரகாஷ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் சரமாரியாக குத்தி தப்பினார். இதில், பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து, தாய் சாந்தி மற்றும் சகோதரர் ராஜேஷ் பிராங்கோ ஆகியோர் பிரியா வீட்டிற்கு விரைந்தனர். இதற்கிடையில், தந்தை செல்வராஜை காணாததால், அவரைத் தேடி வீட்டிற்கு சென்றபோது, செல்வராஜ் படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த மாங்காடு போலீசார், செல்வராஜ் மற்றும் பிரியாவின் உடல்களை மீட்டு, அப்பகுதியில் சுற்றித் திரிந்த பிரகாஷை கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரகாஷ், சில ஆண்டுகளுக்கு முன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பிரகாஷுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து, அவரது பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் ஒன்றாக கூடி பேசியுள்ளனர்.
இதனால், ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ், தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்துள்ளார்.