தாம்பரம், :
இந்த நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், புறநகர் பகுதிகளில் குற்றங்களை குறைக்கவும், போக்குவரத்தை சீர்படுத்தவும், சட்டம் - ஒழுங்கு தொடர்பாக மக்களின் குறைகளை உடனுக்குடன்நிவர்த்தி செய்யவும், கடந்த ஆண்டு, சென்னை மாநகர காவல் எல்லை மூன்றாக பிரிக்கப்பட்டது. புதிதாக தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டன.
தாம்பரம் காவல் ஆணையரக கட்டுப்பாட்டில், ஏற்கனவே, சென்னை கமிஷனரக கட்டுப்பாட்டில் இருந்த காவல் நிலையங்களுடன், புதிதாக சில காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டு, 20 காவல் நிலையங்களாக கொண்டு வரப்பட்டன.
அதேபோல், ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில், 25 காவல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டன.
ஒருங்கிணைந்த சென்னை காவல் ஆணையரகமாக இருந்தபோது, காவலர்கள் இரவு, பகலாக பணியாற்றுவதை கருத்தில் கொண்டு, 'பீடிங்' எனப்படும் உணவுப்படி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, போலீசார் முதல் ஆய்வாளர்கள் வரை, மாதத்தில் 26 நாட்கள் என கணக்கிட்டு, 7,800 ரூபாய் வரை பெற்று வந்தனர். ஒவ்வொரு மாதமும், 15ம் தேதிக்குள், இந்த உணவுப்படி வழங்கப்பட்டு வந்தது.
தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள்பிரிந்தபோது, இந்த நடைமுறை அப்படியே தொடர்ந்தது.
இந்த நிலையில், இரண்டு காவல் ஆணையரக போலீசாருக்கும் வழங்கப்பட்டு வந்த உணவுப்படி, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்லையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு வழங்கப்படும் டி.ஏ., எனப்படும் பயணப்படி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த உணவுப்படி ரத்து செய்யப்பட்டதால், தாம்பரத்தில் 3,600, ஆவடி-யில் 4,623 என, மொத்தம், 8,223 காவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த உணவுப்படி தொகை, வங்கிக் கடன், குழந்தைகளின் கல்விக் கட்டணம், திடீர் மருத்துவ செலவுகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வேதனையில் உள்ளனர்.
பெயர் தெரிவிக்க விரும்பாத காவலர்கள் கூறியதாவது:
காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை, காலையிலேயே பணிக்கு வந்து விடுகிறோம். சில நேரங்களில், இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பணி செய்ய வேண்டியுள்ளது.
போலீசாரின் இந்த பணியை கருத்தில் கொண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உணவுப்படி வழங்கும் நடைமுறையை கொண்டு வந்தார்.
ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்லையில் பணிபுரியும் போலீசாருக்கு, இந்த நடைமுறை இல்லை. மாறாக, அவர்களுக்கு டி.ஏ., எனப்படும் பயணப்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து பிரித்து, புதிதாக தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டன.
சென்னை காவல் ஆணையரகத்தில் பணி புரிந்த போலீசாரே, புதிய காவல் ஆணையரகங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டனர். அதோடு, அவர்களுக்கு உணவுப்படியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், உணவுப்படியை திடீரென நிறுத்தி, எல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போல பயணப்படி மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
பயணப்படி, போலீசாரின் 'கிரேடு'க்கு ஏற்றார் போல், 2,000 முதல் 5,000 ரூபாய் வரை கிடைக்கும். முன் கிடைத்த தொகை கிடைக்காது என்பதால், போலீசார் வேதனை அடைந்துஉள்ளனர்.
ஒன்றரை ஆண்டுகளாக வழங்கிய, உணவுப்படியை திடீரென ரத்து செய்வது எந்த விதத்தில் நியாயம்.
இப்படி செய்துள்ளதால், சென்னை காவல் ஆணையரகத்திற்கே மாறுதல் வாங்கி மீண்டும் சென்றுவிடலாமா என்ற எண்ணத்தில் போலீசார் உள்ளனர்.
ஏற்கனவே, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பணியாற்றிய போலீசாரே, இந்த இரண்டு ஆணையரகங்களிலும் பணி செய்வதால், இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, ரத்து செய்யப்பட்ட உணவுப்படியை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.