திருநெல்வேலி:''தமிழகத்தில் பா.ஜ., எந்த கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் ,''என பா.ஜ., சட்டசபை குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
'தமிழகத்தில் தனியாக செயல்பட்டால் தான் கட்சியை வளர்க்க முடியும். தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி என்ற முடிவு எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் 'என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
இதுகுறித்து திருநெல்வேலி எம்.எல்.ஏ.,வும் பா.ஜ., மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரனிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
தேர்தலில் பா.ஜ., யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். அண்ணாமலை பதவி விலகுவது என்பது அவர் தனிப்பட்ட கருத்தாகும்.
தமிழக தேர்தலில் யாரும் தனித்து போட்டியிட்டதில்லை. ஏதாவது ஒரு கூட்டணிதான் இருந்துள்ளது, என்றார்.
பா.ஜ.,வில் இருந்து வெளியேறி மற்ற கட்சிகளில் இணையும் பிரமுகர்கள் நயினார் நாகேந்திரனும் அதிருப்தியில் இருப்பதாக கூறியிருக்கிறார்களே... என்ற கேள்விக்கு, ''எனது நிலைப்பாட்டை நான் தான் கூற முடியும்.
மற்றவர்கள் கூறமுடியாது. மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தால் நான் மருத்துவமனைக்கு போக வேண்டும். போகவில்லை. அப்படி ஒரு பாதிப்பும் இல்லை ''என்றார்.