ஆர்.ஏ.புரம்: ராஜா அண்ணாமலைபுரத்தில், இயற்கை முறையில் மாடித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சிப் பட்டறையில், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், ஏழாவது பிரதான சாலையிலுள்ள மாநகராட்சி பூங்காவில், அரசு தோட்டக்கலை மற்றும் 'ராப்ரா' ஆகியவை இணைந்து, இயற்கை முறை மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி பட்டறையை நேற்று நடத்தின.
இதில், ராஜா அண்ணா மலைபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராப்ரா தலைவர் சந்திரசேகர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, பயிற்சிப் பட்டறைக்கு வந்தவர்களை வரவேற்றார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலகுமார், இயற்கை முறையில் மாடித் தோட்டம் அமைப்பது குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், 900 ரூபாய் மதிப்பிலான இயற்கை உரங்கள், மானிய விலையில் தோட்டக்கலை துறை சார்பாக, 450 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
இயற்கை முறையில், வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பது குறித்தும், பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன், மாடித் தோட்டத்தை பராமரிக்க, இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பது குறித்தும் விளக்கினர்.
காய்கறி வளர்ப்பு பைகள், இயற்கை உரங்கள், விதை பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டன. செய்முறை விளக்க கையேடும் வழங்கப்பட்டது.