சென்னை: இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், அகில இந்திய பல்கலை இடையிலான 'கிக் பாக்சிங்' சாம்பியன் ஷிப் - 2023 போட்டி, உ.பி., மாநிலம், ஜான்பூரிலுள்ள பூர்வாஞ்சல் பல்கலையில் நான்கு நாட்கள் நடந்தது.
இந்திய அளவில், அதிமுக்கியமானதாக கருதப்படும் இப்போட்டியில், நாட்டின் பல மாநிலங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட பல்கலை அணிகளின் 435 வீரர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு எடை பிரிவின் கீழ் நடந்த இப்போட்டியில், ஆண்களுக்கான 'கிக் லைட்' 69 கிலோ எடை பிரிவில், பல்லாவரம் வேல்ஸ் பல்கலையில், பி.எஸ்சி., அனிமேஷன் முதலாம் ஆண்டு மாணவர் சபரி கிருஷ்ணன், ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்பட்டு, இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நுாலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு, வெள்ளி பதக்கம் வென்றார். இப்போட்டியில், தமிழக மாணவர் ஒருவர் பதக்கம் பெறுவது இதுவே முதல் முறை.