சென்னை: அகில இந்திய வில்வித்தை சங்கம் சார்பில், 42வது தேசிய வில்வித்தை போட்டிகள், கடந்த 9 முதல் 18ம் தேதி வரை நடந்தன.
குஜராத், கேவாடியா மைதானத்தில் நடந்த இப்போட்டிகளில், நாடு முழுதும் 28 மாநிலங்கள் மற்றும் ஆறு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1,500 வீரர்கள் மற்றும் வீராங்கனையர் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் பின்பற்றப்படும் 'ரிகர்வ், காம்பவுண்ட்' ஆகிய பிரிவுகளில், தமிழகத்தின் சார்பாக, இரு பாலர் பிரிவிலும் சேர்த்து மொத்தம் 24 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
இப்போட்டியின் தரவரிசை பட்டியலில் 16வது இடத்திலிருந்த தமிழக வீராங்கனையர், முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர்.
பின், காலிறுதி போட்டியில் வலிமையான மஹாராஷ்ட்ரா அணியை சாய்த்து, அரையிறுதியில் ஜார்க்கண்ட் அணியினரை 6 - -0 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வீழ்த்தி, இறுதி போட்டிக்குள் நுழைந்தனர்.
பரபரப்பான இறுதிப் போட்டியில், மேற்கு வங்கத்துடன் மோதிய தமிழக வீராங்கனையர், சற்றே பின்னடைவை சந்தித்து, வெள்ளி பதக்கம் பெற்று அசத்தினர்.
பயிற்சியாளர் ஷிகான் ஹூசைனி கூறியதாவது:
தேசிய 'ரிகர்வ்' பிரிவில், தமிழக பெண்கள் அணி பதக்கம் வெல்வது, இதுவே முதல் முறை. அரையிறுதி போட்டியில், தமிழகத்துடன் மோதிய ஜார்க்கண்ட் அணியில், உலக இளைஞர் சாம்பியன்களான கோமாளிகா பாரி மற்றும் அங்கிடா பகத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஆனாலும், நம் தமிழக வீராங்கனைகள் ஜார்க்கண்ட் அணியை 6 - -0 என வீழ்த்தி, தங்கள் திறமையை நிரூபித்தனர். வரும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனையர் நிச்சயம் பதக்கம் வெல்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.