சென்னை: சென்னை மாநகராட்சியில், 1,500 கோடி ரூபாய் சொத்து வரி நிர்ணயம் செய்ததில், 1,388 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. நிதியாண்டு இறுதியின் மார்ச் மாதம் மட்டும், நிர்ணயம் செய்த 250 கோடி ரூபாயில், 79.66 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி உள்ளது. மீதமுள்ள, 170.34 கோடி ரூபாயை வசூலிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினாலும், பல்வேறு நடவடிக்கை வாயிலாக இலக்கை அடையும் பணியில், மும்முரமாக இறங்கி உள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் வருவாயில், சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. அந்த வகையில், மொத்தம், 13.31 லட்சம் பேரிடம் சொத்து வரி, தொழில் வரியாக ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் வசூலிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை, அரையாண்டு வீதம் செலுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதில், முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காலதாமதமாக வரி செலுத்துவோரிடம், 2 சதவீதம் தனி வட்டி வசூலிக்கப்படும். இந்த 2022 - -23ம் நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதால், தனி வட்டி இல்லாமல் வரி செலுத்துவதற்கு, கடந்த ஜன., 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இருந்தும், பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். சொத்து வரி செலுத்தாதவர்கள் பட்டியல், மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 'நோட்டீஸ்' வழங்கி, 'சீல்' உள்ளிட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நிதியாண்டில் இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், வரி வசூலை தீவிரப்படுத்த, அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. மாநகர வருவாய் அதிகாரிகள், மண்டல உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூலிப்பாளர்கள், வரி மதிப்பீட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், 'இந்த நிதியாண்டில், 1,500 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். ஆனால், மார்ச் 15ம் தேதி வரை, 1,388 கோடி ரூபாய் தான் வசூலாகி உள்ளது. மார்ச் மாதம் வசூலிக்க வேண்டியவை குறித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் பட்டியல் அனுப்பப்பட்டது.
இதுவரை சிறப்பாக வரி வசூலித்துள்ளீர்கள். அதுபோல், மார்ச் மாதம் வழங்கிய இலக்கை அடைய தீவிரமாக பணியாற்ற வேண்டும்' என, உயர்அதிகாரிகள் கூறி உள்ளனர். மொத்த வரியில் மார்ச் மாதம், 250 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 17 நாளில், 79.66 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 14 நாளில், 170.34 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும்.
இந்த இலக்கை அடைய, வரி வசூலிப்பாளர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீண்ட நாள் வரி செலுத்தாமல் 'டிமிக்கி' கொடுக்கும் நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதுவரை, 5 லட்சம் உரிமை யாளர்கள் வரி செலுத்தவில்லை. இவர்களில், பாதி பேர் வரி செலுத்தினாலே, இலக்கை எட்ட முடியும். 170 கோடி ரூபாயை வசூலிக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு வார்டுக்கு தினசரி, 100 பேரிடம் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகள் வரி செலுத்தாத நிறுவனங்களில் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் தலையீடு இல்லாமல், 'சீல்' வைக்கவும் முடிவு செய்துள்ளோம்.
- மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள்
தெற்கு வட்டாரம் முதலிடம்
மார்ச் மாதம் நிர்ணயித்த வரியில், வடக்கு வட்டாரம் 30 சதவீதம்; மத்திய வட்டாரம் 29 சதவீதம் மற்றும் தெற்கு வட்டாரம் 40 சதவீதம் என்ற வகையில், வரி வசூலாகி உள்ளது.