செய்திகள் சில வரிகளில்... ஈரோடு
Added : மார் 20, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ஹிந்து முன்னணி சார்பில்
கோபியில் பொதுக்குழு
ஹிந்து முன்னணி சார்பில், திருப்பூர் கோட்ட பொதுக்குழு கூட்டம், ஈரோடு மாவட்டம், கோபியில் நடந்தது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் கிேஷார்குமார், மாநில செயலாளர்கள் செந்தில்குமார், சண்முகம், சேவுகன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்களின் சொத்துக்களையும், ஆகம விதிகளையும், புனிதத்தையும் காத்து, ஹிந்து மதத்தை காக்க முன் வர வேண்டும். பயங்கரவாதிகளை கைது செய்து, தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். புதிய மதமாற்ற கூடங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என, தீர்மானம் நிறைவேற்றினர்.

திருப்பூர் மாநகர், கிழக்கு, மேற்கு, தெற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு ஆகிய மாவட்டங்களின் கோட்ட, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் நன்றி கூறினார்.


ரூ.6.10 லட்சத்துக்கு
வாழைத்தார் விற்பனை
ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் ஏலம் நடந்தது.
கதளி ரக வாழை கிலோ, 35 ரூபாய், நேந்திரம் கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனையானது. பூவன் தார், 350 ரூபாய், செவ்வாழை, 520, தேன் வாழை, 300, ரஸ்தாளி, 550, மொந்தன், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 4,320 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு, 6.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வரட்டு பள்ளத்தில்
37 மி.மீ., மழை
வரட்டுபள்ளத்தில் அதிகபட்சமாக, 37 மி.மீ., மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் இரு தினங்களாக
இரவு நேரத்தில் லேசான மழை பொழிவு
தொடர்கிறது. நேற்று மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் (மி.மீ):
ஈரோடு, 9, கோபி, 13.2, பவானி, 8, சத்தியமங்கலம், 23, நம்பியூர், 18, மொடக்குறிச்சி, 3, கவுந்தப்பாடி, 1, எலந்தகுட்டை மேடு, 5, பவானிசாகர், 7.6, கொடிவேரி, 15, குண்டேரிபள்ளம், 19.2, அம்மாபேட்டை, 2, வரட்டுபள்ளத்தில், 37 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

மர்ம விலங்கு கடித்து
11 ஆடுகள் பலி
பவானி அடுத்துள்ள, சித்தோடு அருகே தயிர்
பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 52. இவர் இதே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு, குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் ஆறு ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில், மர்ம விலங்கு ஒன்று ஆட்டுப்பட்டியில் புகுந்து, 11 ஆடுகளையும் கடித்து கொன்றது. அலறல் சத்தம் கேட்டு வெங்கடாசலம் வெளியே வந்து பார்த்தபோது, மர்ம விலங்கு அங்கிருந்து
தப்பியது.
இதுகுறித்து வருவாய்த்துறை, வனத்துறை
அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பைக் மீது வேன் மோதி
வங்கி உதவி மேலாளர் பலி
பைக் மீது வேன் மோதி, வங்கி உதவி மேலாளர் பலியானார்.
சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு அடுத்த பெரியதொட்டிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் ராஜேஷ், 27. இவர், கோவை மாவட்டம், பாலத்துரையிலுள்ள ஒரு தனியார் வங்கி கிளையில், உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், தனது ேஹாண்டா யுனிகான் பைக்கில், தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஆம்னி வேன், பைக் மீது மோதியது. இதில், ராஜேஷ் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு உழவர் சந்தைகளில்
62 டன் காய்கறி விற்பனை
ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளில் ஒரே நாளில், 62 டன் காய்கறிகள் விற்பனையாயின.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறையில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு நேற்று, 27 டன் காய்கறிகளை, 119 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 4,782 வாடிக்கையாளர்கள், எட்டு லட்சத்து, 33 ஆயிரத்து, 758 ரூபாய்க்கு காய்கறிகளை வாங்கி சென்றனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் மொத்தமாக, 62 டன் காய்கறிகள் விற்பனையாயின. மொத்தம், 17 லட்சத்து, 38 ஆயிரத்து, 221 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

ஓடையில் விழுந்தவர் பலி
ஈரோடு வீரப்பன்சத்திரம் மல்லிநகரை சேர்ந்தவர் காசிநாதன், 63. நரம்பு தளர்ச்சி காரணமாக வலிப்பு நோய் இருந்து வந்தது. தினமும் மது அருந்தும் பழக்கமும் இருந்தது.
கடந்த, 12 மாலை, 6:30 மணிக்கு வீட்டின் அருகே மது குடித்து விட்டு எழுந்த போது வலிப்பு ஏற்பட்டது. இதனால் நிற்க முடியாமல் தள்ளாடி, அங்கிருந்த நீர் இல்லாத ஓடையில் விழுந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கடந்த, 18ல் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிளாஸ்டிக் பொருள் நிறுவன
ஆலையில் தீ விபத்து
ஈரோட்டில் உள்ள, பிளாஸ்டிக் பொருட்கள்
நிறுவன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரோடு நரிபள்ளத்தில், எஸ்.கே., பிளாஸ்டிக் என்ற நிறுவன ஆலை செயல்படுகிறது. இதன் உரிமையாளர் குமரேசன். இந்நிறுவனம், பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி மறு சுழற்சிக்கு தயார் செய்து அனுப்பும் வேலையை செய்கிறது. நேற்று விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் இல்லை.
வட மாநில தொழிலாளர்கள் மட்டும் ஆலைக்குள் தங்கி, நேற்று மதியம் சமைத்து கொண்டிருந்தனர். அப்போது தீப்பொறி பறந்து பிளாஸ்டிக் கழிவுகளில் பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் பிளாஸ்டிக் கழிவில் தீப்பிடித்து எரிந்தது.
ஈரோடு தீயணைப்பு வீரர்கள், 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கழிவு பிளாஸ்டிக் எரிந்து சாம்பலாயின. சேத மதிப்பு, 9,000 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் புதிய பாரத
எழுத்தறிவு திட்ட தேர்வு
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு ஈரோடு மாவட்டத்தில், 1,404 மையங்களில், 23 ஆயிரத்து, 598 கல்லாதோருக்கு நடந்தது.
ஈரோடு எஸ்.கே.சி., ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மையத்தில் நடந்த தேர்வை சி.இ.ஓ., அய்யணன், ஈரோடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நரசிம்மன், ஈரோடு வட்டார கல்வி அலுவலர் மேகலா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஏற்பாடுகளை பள்ளி தலைமை
ஆசிரியை சுமதி, கணினி ஆசிரியை கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.

எண்ணும், எழுத்தும்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், எண்ணும், எழுத்தும் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நிகழ்ச்சி துவங்கியது. சி.இ.ஓ.,
அய்யணன் தலைமை வகித்தார்.
பின்னர் ப.செ.பார்க், பஸ் ஸ்டாண்ட், சத்தி, கோபி, பவானியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கல்வி கற்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டன.

தெருமுனை பிரசாரம்
இந்திய தொழிற்சங்க மையம் ஈரோடு மாவட்ட குழு சார்பில்,
இரு சக்கர வாகன பேரணி, தெருமுனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர்
சுப்பிரமணி தலைமை வகித்தார்.
மத்திய இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் ஏப்.,5ல் டில்லியில் பாராளுமன்றத்தை நோக்கி ஐந்து லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்தப்படுகிறது. அதை முன்னிட்டு மக்களிடையே பரப்புரை நடத்தும் விதமாக இரு சக்கர வாகன பிரசாரம், தெருமுனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பொது துறை, தொழில்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வை
கட்டுப்படுத்துதல், 100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தெரு முனை கூட்டம் நடந்தது.

காங்கேயம் இன மாடுகள்
ரூ.18 லட்சத்துக்கு வர்த்தகம்
திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது.
திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்ட விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்றைய சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 103 கால்நடைகள் வரத்தாகின.
மாடுகள், 20 ஆயிரம் முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 55 கால்நடைகள், 18 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

மது விற்பனை
செய்தவர் கைது
காங்கேயம் அடுத்த, படியூர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவல் அடிப்படையில், காங்கேயம் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
இதில் படியூரை சேர்ந்த ருக்குமணி, 45, என்பவர் மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஐந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கொடிவேரி தடுப்பணையில்
குவிந்த சுற்றுலா பயணிகள்
கோபி, மார்ச் 20-
கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் வெளியேறுகிறது. இதனால், கொட்டும் அருவியில் குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். வார விடுமுறை நாள் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்
அருவியில் நேற்று குளித்தனர்.
பின் அங்கு சுடச்சுட விற்பனையான,
மீன் ரோஸ்ட்டை வாங்கி சுவைத்தபடி, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்து,
அவரவர் சொந்த ஊர் திரும்பினர்.

போலீசாரை திட்டிய
போதை வாலிபர் கைது
ஈரோடு, மார்ச் 20-
ஈரோடு, சென்னிமலை சாலையில் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் சவர்லைட் கார் ஒன்று பொதுமக்கள் மீது மோதுவது போன்று தடுமாறி வந்தது. அங்கு வந்த ரோந்து போலீசார் காரை நிறுத்தினர். காரில் இருந்து இறங்கிய வாலிபர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கேட்டனர். ஆத்திரமடைந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். உடனடியாக அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
சூரம்பட்டி போலீசார் விரைந்து வந்து வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். பின்னர் அவர் மீது, குடிபோதையில் வாகன இயக்கம், தகாத வார்த்தையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
காரை ஓட்டிய பெரியார் நகரை சேர்ந்த டானியல், 24, கைது செய்யப்பட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது.

டாஸ்மாக் ஊழியர்களை
தாக்கிய 4 பேர் கைது
ஊதியூர், மார்ச் 20-
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் முரளி என்ற தங்கையா, 33. இவர் ஊதியூர் அருகே பங்காம்
பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணி
புரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் தங்கையாவும், டாஸ்மாக் சூப்பர்வைசர் உக்கிரபாண்டி, அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோர் மதுபான கடையை மூடிவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த
பங்காம்பாளையத்தை சேர்ந்த முத்துப்பாண்டி, 21, கோகுல்ராஜ், 28, மதிவாணன், 24, அய்யனார், 21 ஆகிய நான்கு பேரும் கடைக்கு வந்து மதுபானம் கேட்டு வாக்கு
வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தங்கையா, உக்கிரபாண்டி, கோவிந்தராஜ் ஆகிய மூவரை கட்டை மற்றும் கத்தியால் குத்தி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பினர். காயமடைந்த தங்கையா, உக்கிரபாண்டி, கோவிந்தராஜ் ஆகிய மூவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊதியூர் போலீசார் விசாரித்து, முத்துப்பாண்டி உட்பட நான்கு பேரையும் கைது செய்து
விசாரித்து வருகின்றனர்.
தொழிலாளி பலி
மொடக்குறிச்சி, மார்ச் 20-
ஈரோடு, கொள்ளுகாடு மேடு ஆர்.க்யூப் கம்பெனியில் மேட்டூர் ராமன் நகர் புளியமரத்துார் ராஜேந்திரன் மகன் செந்தமிழன், 32, ஓராண்டாக வெல்டராக பணியாற்றி வந்தார். கடந்த, 18 இரவு, மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். வெல்டிங் செய்து கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக மொடக்குறிச்சி போலீசில் ராஜேந்திரன் புகார் செய்துள்ளார்.

சரக்கு வேன் கவிழ்ந்து
20 பேர் காயம்
தாராபுரம், மார்ச் 20-
தாராபுரம் அடுத்துள்ள சோமனுாத்து பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள், சத்திரம் பகுதிக்கு வெங்காயம் பறிக்கும் வேலைக்கு சென்று விட்டு, நேற்று மாலை, 4:30 மணியளவில் டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சோமனுாத்து அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக, தடுமாறி கவிழ்ந்தது. இதில்,
வாகனத்தில் பயணம் செய்த காளியம்மாள், ஈஸ்வரி, லட்சுமி உள்பட, 20 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த நான்கு பேர் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அலங்கியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட
அட்டகாசம் செய்த குரங்குகள்
சென்னிமலை, மார்ச் 20-
சென்னிமலை வனப்பகுதியில் இருந்த குரங்குகள் உணவு, தண்ணீரை தேடி நகர் பகுதிக்கு வலம் வர துவங்கிவிட்டன. வீட்டு மாடிகளில் காய வைத்திருக்கும் உணவு பொருட்களை எடுத்து தின்பது, குழந்தைகள், பெண்களை அச்சுறுத்துவது. கடைகளில் உள்ள பொருட்களை நாசப்படுத்துவது. கேபிள் ஒயர்களை அறுப்பது என குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்தது. இதையடுத்து குரங்குகளை பிடிக்க, வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. கூண்டுக்குள் நுழைந்த ஏழு குரங்குகள் சிக்கிக்கொண்டன. அவற்றை வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

கற்றலை கொண்டாடுவோம்
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கோபி, மார்ச் 20-
பள்ளிக்கல்வித்துறை சார்பில், எண்ணும், எழுத்தும் எனும் திட்டத்தின் கீழ், கற்றலை கொண்டாடுவோம் என்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கோபி பஸ் ஸ்டாண்டில் நடந்தது.
கோபி டி.இ.ஓ.,(தொடக்க கல்வி) பழனி கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோபி வட்டார கல்வி அலுவலர்கள் கோபால், ஜெகநாதன், கோபி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி மற்றும் அதன் பொறுப்பு அலுவலர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இல்லம் தேடி கல்வி ஆசிரியர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X