ஈரோடு: வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 377 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மதுவிலக்கு போலீசார், கருங்கல்பாளையம் கமலா நகர் குடியிருப்பு பகுதியில் கண்காணித்தனர். அப்பகுதியில் உள்ள வீட்டில் டாஸ்மாக், வெளி மாநில மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து ஈரோடு முனிசிபல் காலனி ஜான்சி நகரை சேர்ந்த கருணாகரனுக்கு சொந்தமான கமலா நகர் வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு புதுச்சேரி புல் பாட்டில்கள், 98, குவாட்டர் பாட்டில், 61, ஆப் பாட்டில், 218 என மொத்தம், 377 பாட்டில்கள் இருந்தன.
அவற்றை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு, 76 ஆயிரத்து, 547 ரூபாய்.
இது தொடர்பாக கருணாகரன் மகன் சதீஷ்குமார், 32, கிருஷ்ணம்பாளையம் ரோடு அருணாசலம் மகன் முரளிதரன், 27, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.